Sunday, December 29, 2013

ஸ்மார்ட்போன்களில் Sensor தொழில்நுட்பம்


Sensor Technology என்றால் என்ன? 


இன்று ஸ்மார்ட்போன்களில் இத்தொழில்நுட்பம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. சென்சார் தொழில்நுட்பத்தை தமிழில் "உணர்வலை" தொழில்நுட்பம் எனலாம். ஏதாவது ஒரு புற்காரணியின் மூலம் தூண்டுதலைப் பெற்று, அந்த தூண்டலுக்கேற்ப செயல்படும் நுட்பம் சென்சார் தொழில்நுட்பமாகும். 

சென்சார் தொழில்நுட்பத்தின் செயல்பாடு: 


சென்சார் தொழில்நுட்பமானது ஒரு தூண்டுலைப் பெற்று அதற்கேற்ற வகையில் இயங்கும். அந்த தூண்டுதலானது வெப்பமாக இருக்கலாம். ஒளியாக இருக்கலாம். ஏன் அது ஒரு ரேடியோ அலையாக கூட இருக்கலாம். 
smartphone sensors
இவற்றில் எந்த ஒரு காரணியும் ஒரு தூண்டுதலை ஏற்படுத்தும்பொழுது, அதை உணர்ந்து அந்த தூண்டுதலுக்கேற்ற செயல்பாட்டைச் செய்யக்கூடிய நுட்பமே சென்சார் தொழில்நுட்பம். 

சென்சார் தொழில்நுட்பமானது பல்வேறு பரிமாணங்களில் வளர்ச்சிப்பெற்று வருகிறது. 

Ambient Light Sensor- ஒளி உணர்வலை: 


தற்போதுள்ள ஸ்மார்ட்போன் சாதனங்களான டேப்ளட் பி.சி., ஸ்மார்ட் போன்கள் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் இயங்கும் பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க இது பயன்படுகிறது. 

டிஸ்பிளேயினைச் சரி செய்து, நாம் நன்றாகப் பார்க்க வசதி செய்கிறது. அதிக ஒளியுடன் திரைக் காட்சி இருந்தால், அதனைக் குறைத்து, காட்சியினைத் தெளிவாகக் காட்டுவதுடன், அதன் மூலம் பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்கிறது.

Proximity sensor - அருகமைவு உணர்வலை 


இப்போது வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களும் தொடுதிரை தொழில்நுட்பத்துடன் அமைந்துள்ளது. உங்களுக்கு வரும் போன் கால்களை நீங்கள் அட்டண்ட் செய்து பேசும்பொழுது, காதில் பட்டு, தேவையில்லாத அப்ளிகேஷன்கள் திறப்பதை தடுப்பதற்கான  சென்சார்நுட்பம் இது. 

நீங்கள் உங்களுக்கு வந்த அழைப்பை ஏற்றுப் பேசுவதற்கு காதருகே ஸ்மார்ட்போனை கொண்டு செல்லும்பொழுது தானாகவே ஸ்கிரீன் லாக் ஆகிவிடும். அதனால் எந்த ஒரு அப்ளிகேஷனும் காதில் பட்டு திறக்காது.  பேசி முடித்த பிறகு, காதிலிருந்து ஸ்மார்ட்போனை விலக்கும்போது  தானாகவே மீண்டும் தொடுதிரை பயன்பாட்டுக்கு வந்துவிடும். 

GPS Global Positioning System- புவி இட நிறுத்தல் 


இந்த தொழில் நுட்பம், இராணுவ நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.  சில வருடங்களுக்கு முன்பே பொதுமக்களுக்கும் இத்தொழில்நுட்பம் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.  

நீங்கள் இருக்கும் இடத்தை, இந்த தொழில் நுட்பத்தின் பின்னணியில் இயங்கும் வரைபடம் கண்டறிந்து, ஸ்மார்ட் போனின் திரையில் காட்டுகிறது. இதனைக் கொண்டு, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியைக் கண்டறியலாம். இதற்கான செயற்கைகோள் விண்ணில் புவியை ஒரு நாளில் இருமுறை சுற்றி வருகின்றன. 

அசிஸ்ட்டட் ஜிபிஎஸ் - Assisted GPS 


அஸிட்டட் என்ற புதிய தொழில் நுட்பமும் தற்போது பயன்பாட்டில் உள்ளது. அலைபேசிகள் நெட்வொர்க்குகள் நேரடியாக சாட்டலைட்டைத் தொடர்பு கொள்ள முடியாத போது, இந்த தொழில் நுட்பம், இடையே உள்ள சர்வர்களின் உதவியுடன் செயல்படுகிறது. 

iPhone 3G, 3GS, iPhone4 ஆகியவை இந்த புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. iPhone 4 S, GLONASS என்று அழைக்கப்படும் கூடுதல் வசதியுடன் கூடிய தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது.

Accelerometer- அக்ஸிலரோமீட்டர் 


ஸ்மார்ட் போனில் இயங்கும் இந்த தொழில் நுட்பம், போன் எந்த பக்கம் திருப்பப்படுகிறது என்பதனை உணர்ந்து, அதற்கேற்றார்போல, திரைக் காட்சியைக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, பக்கவாட்டில் போன் திருப்பப்படும்போது, காட்சி போர்ட்ரெய்ட் நிலையிலிருந்து லேண்ட்ஸ்கேப் நிலைக்கு மாற்றப்படுகிறது. 

இதே தொழில் நுட்பம், செறிந்த நிலையில், கைரோஸ்கோபிக் சென்சார் என்னும் தொழில் நுட்பமாகச் செயல்பட்டு, போனின் மாற்று நிலைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு தன் செயல்பாட்டினை மேற்கொள்கிறது.

Compass -காம்பஸ் 


காம்பஸ் என்பது புவியின் முனைகளைக் காந்தத்தின் உதவியுடன் அறிந்து திசை காட்டும் கருவியாகும். ஸ்மார்ட்போனில் உள்ள இந்த தொழில் நுட்பம், காந்த அலைகளைப் போனின் செயல்பாட்டைப் பாதிக்காத வகையில் மாற்றி, திசைகளைக் காட்டுகிறது. 

Other Sensor Technology: மற்ற சென்சார் நுட்பங்கள்


மேலும் gyroscope, BSI போன் சென்சார் தொழில்நுட்பங்களும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படுகின்றன. மேலே சொல்லப்பட்ட அனைத்து தொழில் நுட்பங்களும், குறைந்த மின்சக்தி செலவில், திறன் கூடுதலாகக் கொண்ட செயல்பாடுகளைத் தரும் இலக்குடன் செயல்படுபவை. 

தொடர்ந்து சென்சார் தொழில்நுட்பமானது பல்வேறு படிநிலைகளில் வளர்ச்சியுற்று வருகிறது. எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பமானது மேலும் ஆச்சர்யமிக்க பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

0 comments:

Post a Comment